Friday 21 March 2008

ஒரு சராசரித் தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளராக அண்மையில் காலமான சுஜாதா அவர்கள்தான் இருந்திருக்க முடியும்...
தீவிரமான இலக்கிய ரசனையோ ஆர்வமோ இல்லாதவருக்கும் அறிமுகமான எழுத்தாளராக அவர் இருந்ததற்கு காரணம் அவர் எழுத்தாளராக மட்டுமல்லாது பன்முகம் கொண்டவராக இருந்தது தான்.
தமிழ்ப் பத்திரிக்கை வாசகர்களுக்கு சிறுகதை,தொடர்கதைகள்,அறிவியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு கட்டுரைகள் ,சினிமா ரசிகர்களுக்கு கதை, திரைக்கதை,வசனம் என அவரது எழுத்துக்கள் பல அவதாரங்கள் எடுத்துள்ளன....
எழுத்தாளராக மட்டுமல்லாமல் விஞ்ஞானியாகவும் இருந்து இந்தியத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே தனது "சிலிக்கன் சில்லுப் புரட்சி" மூலம் கணினிகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஆனந்த விகடனின் "பூக்குட்டி" முதல் கணையாழியின் "கடைசிப் பக்கம்" வரை பல தரப்பு வாசகர்களுக்கும் எழுதும் திறன்கொண்டவர் .
அவரது எழுத்துக்களில் என்னை ஈர்த்தவை அவரது அறிவியல் கட்டுரைகள், "ஏன் எதற்கு எப்படி" கேள்வி பதில்கள்,கற்றதும் பெற்றதும் கட்டுரைகள்,மற்றும் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" .

அதுவும் ஸ்ரீரங்கத்து தேவதைகள் நான் மிகவும் ரசித்து அனுபவித்த நூல்களில் ஒன்று... '50 களின் ஸ்ரீரங்கத்தைக் கண்முன் கொண்டு நிறுத்தும் அந்த வர்ணனை அவரது தனிச் சிறப்பு...இயல்பாகவே ஸ்ரீரங்கத்தின் மீது பற்று கொண்ட என்னை அங்கேயே இருப்பது போல உணரச் செய்தவை அவரது எழுத்துக்கள்.
சென்ற வருடம் ஒரு திருமணத்துக்காக அங்கு செல்ல நேர்ந்த பொழுது கீழ சித்திர வீதி வழியாக நடந்ததில் ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம் கொண்டேன்...!

இன்றைய ஸ்ரீரங்கம் சுஜாதா காலத்து அடையாளங்களை இழந்திருந்தாலும், எனக்கு அது என்றும் கீழ சித்திர வீதியில் விளையாடும் சிறுவர்களும்,ரங்கு கடையும், டிபிஜி கடையும், 'டென் அனாஸ்' அய்யங்காரும் ,ரங்கன், வத்சலா,அவர்களின் தோழர்களும் வாழும் அன்றைய ஸ்ரீரங்கமாகவே இருக்கும்....

ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் ஒரு கதையின் தலைப்பு "almost a genius"...
sujatha was not 'almost a genius'....he was a genius...he was 'always a genius'....

பி.கு :இன்று பங்குனி உத்திரம் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது ....பல நாட்களாக முடிக்காமல் பாதியில் வைத்திருந்த இதை தற்செயலாக, அரங்கனுக்கு உகந்த, ஸ்ரீரங்கத்தில் விசேஷமான இந்நாளில் முடிக்க நேர்ந்தது .....

No comments:

Post a Comment